Sunday, February 17, 2019

ஆட்டிசம் குழந்தைகளின் தகவல் தொடர்புக்கு உதவும் செயலி..!

ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர் (autism spectrum disorder) என்பது நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒரு குறைபாடு. இந்தக் குறைபாடு
குழந்தை பருவத்திலேயே தொடங்கி வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்பதால் ஒருவரின் தினசரி செயல்களில் அதன் தாக்கம் மிகவும் பெரியதாக இருக்கும். இந்த வளர்ச்சி குறைபாடுடைய ஒருவர் எவ்வாறு செயல்படுகிறார், மற்றவர்களுடன் எப்படித் தொடர்புகொள்கிறார், எப்படிக் கற்றுணர்கிறார் என்பதை கவனித்தால் சாதாரண மனிதர்களை விட கொஞ்சம் வித்தியாசமாகவும் வளர்ச்சியில் பின்தங்கியே இருக்கும்.

இப்படிப்பட்ட பிறப்பியல் கோளாறு உள்ள குழந்தைகளுக்கு உதவ சென்னையைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் தனித்துவமான முயற்சியை 2007-ம் ஆண்டு தொடங்கியது. தனது சிலிக்கான் வேலி வேலையை விட்டுவிட்டு அஜித் நாராயணன் இந்தியா திரும்பிய போது வித்யா சாகர் என்பவருடன் சேர்ந்து ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்காக ஒரு செயலியை உருவாக்கலாம் என்ற நல்லெண்ணத்துடன் செயலில் இறங்கினார்கள். இவர்கள் உருவாக்கிய செயலிதான் இன்று பல குழந்தைகளை தங்கள் குறைபாடுகளை மறந்து இந்த உலகத்துடன் இயல்பாகத் தொடர்புகொள்ள பெரிதும் உதவியாய் இருக்கிறது.

அவாஸ் (AvazApp) என்ற செயலி படங்கள் கொண்டு குழந்தைகள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி பிறரிடம் தொடர்புகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அவாஸ் செயலியில் 'நான்', 'வேண்டும்', 'தேவை', போன்ற சொற்களுக்கு ஏற்றவாறு படங்கள் தொகுக்கப்பட்டிருக்கும். வாக்கியங்கள் உருவாக்குவது எப்படி, சொற்களைத் தேடுவது எப்படி எனத் தொடங்கி, 'நான் சாப்பிட வேண்டும்', 'நான் விளையாட போகிறேன்' என்று தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துதல் வரை பரவலாக பல விஷயங்கள் இதில் இருக்கின்றன.

இத்துடன் ஓர் இலக்கண செயலியை உருவாக்கி, அதில் முக்கிய வார்த்தைகளைக் கண்டறிந்து அதை இந்த அவாஸ் செயலிக்கு வழங்குகிறார்கள். இதனால் குழந்தைகள் கேள்விகேட்டு கற்றுக்கொள்ளும் சூழ்நிலையை தங்களால் உருவாக்க முடிந்ததை பெருமிதமாக பகிர்கிறார்கள் இதன் நிறுவனர்கள். ஒரு வாக்கியம் இலக்கணப் பிழையில்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த இவர்கள் ஒரு வழிமுறையை பின்பற்றுவதாகவும் கூறுகின்றனர். ஒரு தரமான செயலியை வழங்கி உலகம் முழுவதும் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார்கள் இந்த இன்வென்சன்ஸ் லேப் நிறுவனம்.



இதுவரை பல ஆயிரம் பதிவிறக்கங்களைக் கடந்து மிகவும் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது அவாஸ் செயலி. இந்தியாவில் முதன்முதலில் இதனை அறிமுகப்படுத்திய போது இந்தியாவை விட அமெரிக்கா, டென்மார்க் போன்ற இடங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. ஏனெனில் அங்கு இருக்கும் கல்வி முறை மிகவும் துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளதால் அவர்களால் இந்தச் செயலியை எளிதாக உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. நம் தமிழ் நாடு அரசு 200 கருவிகளை இந்தச் செயலியுடன் வாங்கியுள்ளது. மிக விரைவில் இதனை அனைத்து மாவட்டங்களுக்கும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

எனது குழந்தையால் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியவில்லையே என்று கவலைப்படும் தாய் தந்தையருக்கு, சிறப்புக் குழந்தைகளுக்கான கல்வி நிறுவனங்கள் என அனைவர்க்கும் அவாஸ் ஒரு கலங்கரை விளக்காக இருக்கும். ‘உலகத்தில் தலை சிறந்த சொல், செயல்’ என்று 2007 ஆண்டே அறிந்து இந்தச் செயலியை உருவாக்கிய நாராயணன் ஒரு இன்ஸ்பியரிங் என்ஜினீயர்.
App download Link
https://play.google.com/store/apps/details?id=com.avazapp.autism.en_in.avaz&hl=en&referrer=utm_source%3Dgoogle%26utm_medium%3Dorganic%26utm_term%3Davaz+app&pcampaignid=APPU_1_089oXJCWMNfgrQGZ5JYo

No comments:

Post a Comment